வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம்
திருப்பூர்,
வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.மேலும், பதவி உயர்வு பெற துறை தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை போன்று மேற்படி பயிற்சிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், தெற்கு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அரசு அலுவலகங்களில் சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பல அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி 2-வது நாளாக காலியாகி கிடந்தன. தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணும் வரை போராட்டம் நடைபெறும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.