ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த மர்ம ஆசாமிகள் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓட்டம்
காங்கேயத்தில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கவரிங் நகையை மர்ம ஆசாமிகள் பறித்தனர். அப்போது பொதுமக்கள் அங்கு வந்ததால் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு, அந்த மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர்.
காங்கேயம்,
காங்கேயத்தில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கவரிங் நகையை மர்ம ஆசாமிகள் பறித்தனர். அப்போது பொதுமக்கள் அங்கு வந்ததால் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு, அந்த மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்கூட்டரில் சென்ற பெண்
காங்கேயம் சாமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சித்ரா (வயது 40). இவர் நேற்று காங்கேயம் கடைவீதிக்கு வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றுள்ளார். தாராபுரம் சாலை, களிமேடு பகுதியில் சென்றபோது, சித்ராவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர்.
அந்த ஆசாமிகள் திடீரென்று சித்ரா அணிந்திருந்த நகையை பறித்தனர். இதனால் ஸ்கூட்டருடன் சித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சித்ராவுக்கு கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதே நேரத்தில் நகையை பறித்த 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இந்த சம்பவம் மாலை 4.30 மணிக்கு நடந்தது.
தப்பி ஓட்டம்
இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் சித்ராவை காப்பாற்ற வருவதை பார்த்து பதறிப்போன ஆசாமிகள், தாங்கள் பறித்த நகை மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர். இதையடுத்து சித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீஸ் நிலையத்தில் சித்ரா கொடுத்த புகாரின் பேரில், காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையில் சித்ரா அணிந்து இருந்தது தங்க நகை இல்லை என்றும், அது கவரிங் நகை என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ஆசாமிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி, அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ஆசாமிகள் தப்பிச்செல்ல உதவிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியும், இந்த ஆசாமிகள் ஏற்பாடு செய்தவர்தானா? என்றும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.
காங்கேயம் பகுதியில் தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.