வடசேரி காய்கறி சந்தையில் 16 கடைகளுக்கு ‘சீல்'வைப்பு
நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில் வாடகை பாக்கி கொடுக்காத 16 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில் வாடகை பாக்கி கொடுக்காத 16 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வாடகை பாக்கி
நாகர்கோவில் மாநகராட்சியில் முக்கியமான சந்தையாக வடசேரி கனகமூலம் சந்தை திகழ்கிறது. இங்கு சுமார் 260 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சந்தையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 126 கடைகளுக்கு ரூ.90 லட்சத்துக்கும் அதிகமாக வாடகை பாக்கி இருப்பது தெரிய வந்தது. எனவே வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தும்படி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. எனினும் பல்வேறு கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை.
போலீஸ் பாதுகாப்பு
எனவே வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா, ராபின்சன், சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் வடசேரி சந்தைக்கு வந்து ‘சீல்’ வைக்கும் பணியை தொடங்கினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சில கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்துவதாக கூறினர். எனவே 30 நிமிடங்கள் வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 40 கடைக்காரர்கள் உடனடியாக பாக்கி தொகையை செலுத்தினார்கள். மீதமுள்ள 86 கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தவில்லை.
16 கடைகளுக்கு ‘சீல்’
எனவே சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடங்கியது. வெற்றிலை விற்பனை கடை, பழக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட 16 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு நடவடிக்கையால் வடசேரி சந்தை பரபரப்பாக காணப்பட்டது.