எடப்பாடி அருகே, வீடு புகுந்து துணிகரம்: உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து 20 பவுன் நகை அபேஸ் ‘டிப்-டாப்’ வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து வீடு புகுந்து 20 பவுன் நகையை அபேஸ் செய்த டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு புதுப்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65). இவர் தனது வீட்டிற்கு முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் நேற்று கடையில் இருந்தார்.
அப்போது 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் டிப்-டாப்பாக உடையணிந்து அதிகாரி போல் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அந்த நபர், குட்கா புகையிலை உள்ளதா? என கேட்டுள்ளார்.
உடனே சீனிவாசன் கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அதை வாங்கி கொண்ட அந்த நபர், தான் உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும், 20-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பகுதியில் இன்று சோதனையிட வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
வீட்டுக்குள் சோதனை
மேலும் புகையிலை இன்னும் எங்கெங்கு வைத்துள்ளாய்? எனக்கூறி நான் சோதனையிட வேண்டும், எனவே வீட்டிற்குள் வந்து காட்டு என்று அழைத்து சென்று உள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த கோவிந்தராஜிடம், அந்த நபரை அறிமுகம் செய்து விட்டு மகன் சீனிவாசன் மீண்டும் கடைக்கு வந்து விட்டார்.
அதே நேரத்தில் வீட்டுக்குள் இருந்த கோவிந்தராஜிடம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் உள்ளதா? என்று அந்த மர்ம நபர் விசாரித்தார். அதற்கு இங்கு எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்காமல் பீரோவைத் திறந்து காட்டு என அந்த டிப்-டாப் நபர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கோவிந்தராஜ் வீட்டிற்குள் இருந்த பீரோவை திறந்து காண்பித்துள்ளார். பின்னர் அதில் இருந்த பொருட்களை கலைத்து பார்த்த அந்த நபர் அதில் இருந்த 20 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே கடையில் இருந்த சீனிவாசன் சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்து வீட்டிற்குள் வந்து பீரோவை பார்த்தார். அதில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன.
20 பவுன் நகை
அப்போது தான் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சீனிவாசன், எடப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் எடப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அங்கு வந்த டிப்-டாப் வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி வீடு புகுந்து 20 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்ற சம்பவம் எடப்பாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.