பேட்டையில் அரசு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
பேட்டையில் அரசு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பேட்டை:
நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை விரைந்து அகற்றிட நீதீமன்றங்கள் அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. அதன்பேரில் நெல்லை பேட்டை பகுதியை சுற்றிலும் முள்ளிகுளம், தாமரைகுளம், கண்டியபேரிகுளம், கிருஷ்ணாபேரிகுளம், பம்பன்குளம், நெடுங்குளம், கருவேலன்குளம், மரக்கையார்குளம், நிலவடிச்சான்குளம், வெங்கப்பன்குளம், வாகைகுளம் மற்றும் நீர்வழித்தடங்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாத்திடவும் ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் மாற்று வழிமுறைகளை அரசு வழிகாட்டல் நெறியை பின்பற்றி அகற்றிட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றை கண்கீடு செய்யும் பணியினை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சமுதாய வளர்ச்சி அலுவலர் மஞ்சு தலைமையில் அதிகாரிகள் நேற்று பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் பகுதியில் இருந்து தொடங்கினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 பேர் சேர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தாரிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே கணக்கீடு செய்யும் பணியினை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.