வழக்குகளில் சமரச தீர்வு காண வக்கீல்கள் முயற்சி செய்ய வேண்டும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி வேண்டுகோள்
வழக்குகளில் சமரச தீர்வு காண வக்கீல்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார்.;
புதுச்சேரி,
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் ஆனந்தா இன் ஓட்டலில் வக்கீல்கள், சமரசர்கள் மற்றும் சட்ட மாணவர்களுக்கான பேச்சுவார்த்தை திறன் மற்றும் சமரசம் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் சோபனாதேவி வரவேற்று பேசினார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் தரம் உயர்த்தப்பட்ட காரைக்கால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய பெயர் பலகையை மாவட்ட நீதிபதி கார்த்திகேயனிடம் வழங்கினார். மேலும் சட்டப்பணிகள் ஆணையத்தின் பாடலின் தமிழாக்க குறுந்தகட்டையும் வெளியிட்டார்.
அப்போது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசியதாவது:-
சமரச தீர்வுகள் காண முற்படும்போது முதலில் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னரே தீர்வுக்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். சமரச தீர்வினால் வக்கீல்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக கருதக்கூடாது.
சமரச தீர்வுகளை காண்பதன் மூலம் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். ஏனெனில் நானும் தொடக்க காலத்தில் வக்கீலாக இருந்தபோது சமரச தீர்வுகள் தேவையில்லை என்றுதான் கருதினேன். ஒரு நீதிபதியாக வந்த பின்பு அதன் முக்கியத்துவத்தை உணருகிறேன்.
நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டுதான் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். ஆனால் சமரச தீர்வு காண முயற்சிக்கும் வக்கீல்கள் எந்த மாநிலத்தில் உள்ள பிரச்சினை என்றாலும் அவர்களால் கையாள முடியும். எனவே பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண முயற்சிக்கவேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார்.
ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பேசியதாவது:-
நீதிமன்றத்துக்கு செல்லாமல் சமரச முயற்சியில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது ஒரு மைல்கல் ஆகும். இந்த பயிற்சியின் நோக்கம் சட்ட சேவை இயக்கத்தின் வளர்ச்சியை காட்டுகிறது.
பீகார் சிறையில் இருந்த கைதி ஒருவர் முன்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த பகவதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 10 ஆண்டுகளாக நான் ஜெயிலில் உள்ளேன். என்ன குற்றம் நான் செய்தேன் என்று கூறியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் பொதுநல வழக்காக அதை விசாரித்தார். அப்போதுதான் இதேபோல் 500 பேர் அங்கு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்க பீகார் அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையிலேயே 1987-ம் ஆண்டு சட்ட உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டது. சென்னையில் வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே புதுவைக்கு சட்ட உதவி மையம் வந்துள்ளது. கிராமப்புறங்களில் பிரச்சினைகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சட்ட பிரச்சினை இல்லாத கிராமம் உருவானால் சமூக பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு ஏற்படும். சமூக நீதி உருவாகும். இவை 3-ம் உருவானால் மக்கள் நலன் சார்ந்த அரசு உருவாகும்.
இவ்வாறு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பேசினார்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன், புதுவை வக்கீல் சங்க தலைவர் முத்துவேல், செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் புதுவை தலைமை நீதிபதி தனபால் நன்றி கூறினார்.