கோபி அருகே குட்டையில் பிணமாக மிதந்த இளம்பெண் பிணம்- போலீஸ் விசாரணை
கோபி அருகே குட்டையில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 25). இவருடைய மனைவி காலமாதேவி (20). கூலித்தொழிலாளர்கள். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் மாமனார், மாமியாருக்கு நேற்று முன்தினம் காலமாதேவி சாப்பாடு கொண்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அங்கப்பன் மனைவியை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தாசநாய்க்கனூரில் உள்ள குட்டை தண்ணீரில் காலமாதேவி பிணமாக மிதந்தார். இதுபற்றி காலமாதேவியின் தந்தை ராமசாமி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஓடையில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து காலமாதேவி குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அங்கப்பனுக்கும், காலமாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமனும், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவும் விசாரித்து வருகிறார்கள்.