நெல்லையில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரம்

நெல்லையில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.;

Update: 2021-02-13 19:27 GMT
நெல்லை:
நெல்லையில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

காதலர் தினம்

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் அன்பை பகிர்ந்து கொள்கின்றன. உலக மக்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர். காதலர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்கின்றனர்.
நாகரீக மாற்றத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்த்து அட்டைகளை மறந்து, சமூக வலைத்தளத்தில் உடனுக்குடன் தொடர்பு கொண்டு அன்பை பரிமாறி கொள்கின்றனர். எனினும் தங்களது பிரியமானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை நேரில் பெறுவதிலும் தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது.

பூக்கள், பரிசு பொருட்கள் விற்பனை மும்முரம்

காதலர் தினத்தை முன்னிட்டு, நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் வாழ்த்து அட்டைகளை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். மேலும் பரிசு பொருட்கள், ரோஜா உள்ளிட்ட பூக்களின் விற்பனையும் அதிகரித்தது.
ஏராளமானவர்கள் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பிடித்த விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி, அவற்றை வண்ண காகிதத்தால் சுற்றி அலங்கரித்தும் எடுத்து சென்றனர். சிலர் ஜோடியாகவும் வந்து பரிசு பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு, ஓசூர், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லைக்கு பூக்களின் வரத்து அதிகமாக இருந்தது. மனதுக்கு இதமளிக்கும் வகையில், பூங்கொத்துகளாகவும், மலர் கூடைகளாகவும் விற்பனை செய்யப்பட்ட பூக்களை பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்