ஒடிசா சிறுமியை திண்டுக்கல்லுக்கு கடத்தி வந்த வாலிபர்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஒடிசா சிறுமியை திண்டுக்கல்லுக்கு கடத்தி வந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
திண்டுக்கல்:
சிறுமி கடத்தல்
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கட்டாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கட்டாக் அருகேயுள்ள ஜாஜ்பூர் கலிங்க்நகரை சேர்ந்த சரோஜ்பிராய் (வயது 22) என்பவர், அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தமிழ்நாட்டுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் சரோஜ்பிராயிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து சரோஜ்பிராயின் செல்போன் எண் செயல்பாட்டை போலீசார் கண்காணித்தனர். அதில், திண்டுக்கல்லில் அவருடைய செல்போன் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
நூற்பாலையில் வேலை
இதைத் தொடர்ந்து கட்டாக் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகு தலைமையிலான போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்தனர்.
மேலும் திண்டுக்கல்லில் முகாமிட்டு, உள்ளூர் போலீசாருடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வெளிமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நூற்பாலைகளில் வேலை செய்து வருகின்றனர்
. எனவே, நூற்பாலைகளில் வேலை செய்யும் வெளிமாநில இளைஞர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு நூற்பாலையில் சரோஜ்பிராய் வேலை செய்வது தெரியவந்தது
. இதையடுத்து அவரை, கட்டாக் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரால் கடத்தி வரப்பட்ட சிறுமியையும் போலீசார் மீட்டனர். இதைத் தொடர்ந்து 2 பேரையும் ஒடிசாவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.