நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்ந்து, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-02-13 19:08 GMT
நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-475, ஐதராபாத்-416, விஜயவாடா-430, மைசூரு-463, மும்பை-460, பெங்களூரு-460, கொல்கத்தா-483, டெல்லி-421.

முட்டைக்கோழி கிலோ ரூ.53-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.58 ஆக உயர்ந்து உள்ளது. 

கறிக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84 அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டையின் அளவு 50 லட்சமாக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. முட்டையின் தேவை அதிகரித்து உள்ள நிலையில் உற்பத்தி குறைந்து உள்ளதால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 

கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்த்தப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்