ரோஜா பூக்கள் விலை உயர்வு
காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
பொள்ளாச்சி,
உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர் தின வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், ரோஜா பூக்கள் உள்ளிட்டவைகளை விற்பனை சூடுபிடிக்கும். மேலும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு அவற்றை பரிசளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
சுற்றுலா தலங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நவீன செல்போன்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.
இருப்பினும் காதலர் தினம் என்றால் ரோஜா பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதை மறக்காமல் தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் காதலர் தினத்தையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு ரோஜா பூ ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
வழக்கமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு காதலர் தினத்தையொட்டி 200 முதல் 250 கட்டு வரை ரோஜா பூக்கள் வரத்து இருக்கும். இந்த ஆண்டு பனி அதிகமாக உள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகி விடுகின்றன.
தற்போது பெங்களூரு, ஒசூர் பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால் பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. 100 முதல் 150 கட்டு வரை தான் பூக்கள் வந்தன.
ஒரு கட்டில் 20 பூக்கள் இருக்கும். ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரையும், சில்லி ரோஜ் ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.200 வரையும் விற்பனை ஆனது. வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
வழக்கமாக காதலர் தினத்தையொட்டி பூக்கள் விற்பனை வழக்கமாக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு விலை அதிகமாக இருப்பதால் பூக்கள் விற்பனை மந்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.