பிடிபட்ட காட்டுயானை, முதுமலை மரக்கூண்டில் அடைப்பு

சேரம்பாடியில் பிடிபட்ட காட்டுயானை, முதுமலை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.;

Update: 2021-02-13 18:21 GMT
கூடலூர்,

சேரம்பாடியில் பிடிபட்ட காட்டுயானை, முதுமலை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அது ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் 3 பேரை காட்டுயானை தாக்கி கொன்றது. அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 2 முறை மயக்க ஊசி செலுத்திய பிறகும் வனத்துறையினரிடம் சிக்காமல் அந்த காட்டுயானை டிமிக்கி கொடுத்து வந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் அதனை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பக அபயாரண்யம் முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர்.

இந்த நிலையில் மயக்கம் தெளிந்ததும் அந்த காட்டுயானை மரக்கூண்டில் இருந்து வெளியே வர ஆக்ரோஷத்துடன் முயன்றது. உடனே அதற்கு கரும்புகள் மற்றும் பசுந்தழைகளை வனத்துறையினர் வழங்கினர். 

மேலும் வனச்சரகர் தயானந்தன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் ராஜேஷ்குமார், சுகுமாரன் மற்றும் பாகன்கள் மாண்பன், விக்ரம் ஆகியோர் அடங்கிய அந்த காட்டுயானையை தொடர்ந்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதன் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்மபோது, அடுத்த சில நாட்களுக்கு அந்த யானை ஆக்ரோஷமாக காணப்படும். அதன்பிறகு படிப்படியாக ஆக்ரோஷம் குறைந்துவிடும். தொடர்ந்து 2 மாதங்களுக்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும். 

அதன்பிறகு பாகன்கள் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும். தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கும்கி யானையாக மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்