மங்கள சனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-02-13 18:06 GMT
குடவாசல்;
திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மங்கள சனீஸ்வரர் கோவில் 
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மங்கள சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
சூரியனின் மனைவிகளான உ‌ஷா தேவியும், சாயா தேவியும் தங்களுக்கு புத்திரபாக்கியம் வேண்டி திருமெய்ச்சூர் மேகநாதசுவாமியை வழிபட்டு தவம் புரிந்தனர். அதற்கு இறைவன் நீங்கள் இருவரும் உங்கள் கணவருடன் இத்தலத்தில் உள்ள சூரிய பு‌‌ஷ்கரணியில், நீராடி மேற்கே உள்ள திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரரை, சாயரட்சை வேலையில் பூஜை செய்து வழிபட்டால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என வரமளித்தார். அதன்படி சூரியனுக்கும் உ‌ஷாதேவிக்கும் எமதர்மனும், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானும், பிறந்ததாக வரலாறுகள் கூறுகிறது
மண்டலாபிஷேகம் 
பல்வேறு சிறப்புகளை பெற்ற திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து 48 நாட்கள் சனீஸ்வர பகவானுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக விழா நடந்தது. முன்னதாக காலை 8 மணி அளவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடந்தது.
மதியம் 12 மணியளவில் யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம், புறப்பாடாகி மங்கல சனீஸ்வர பகவானுக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தன்ராஜ், தக்கார் மாதவன், வேளாளர் வள்ளிக்கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்

மேலும் செய்திகள்