குமரியில் காண்டிராக்டர் பிணம் தோண்டி எடுப்பு; வக்கீல் கைது
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டர் சாவில் திடீர் திருப்பமாக அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடலை தோண்டி எடுத்தனர். மேலும் வக்கீல் உள்பட 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.;
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டர் சாவில் திடீர் திருப்பமாக அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடலை தோண்டி எடுத்தனர். மேலும் வக்கீல் உள்பட 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட காண்டிராக்டர்
திங்கள்நகர் அருகே பாளையம் பூச்சிகாட்டுவிளையை சேர்ந்தவர் பால்துரை என்ற ஜோசப் (வயது 56), கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்தார். இவருக்கு பிளாரன்ஸ் பியூலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த 1-ந் தேதி இரவு பால்துரை திக்கணங்கோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேக்கோடு பகுதியை சேர்ந்த வக்கீல் ஜோசப் (45), ரமேஷ் (40) ஆகிேயார் அவருடன் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த ஜோசப் திடீரென பால்துரையை தாக்கி கீழே தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளார். படுகாயமடைந்த பால்துரையை அருகில் நின்ற ரமேஷ் மீட்டு குளச்சல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் பால்துரையை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். பால்துரையின் மனைவி விசாரித்த போது அவர் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறிவிட்டு சென்றார்.
பரிதாப சாவு
இந்தநிலையில் மறுநாள் பால்துரை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5- ந் தேதி பால்துரை பரிதாபமாக இறந்தார்.
அவர் கீழே விழுந்து இயற்கையான முறையில் இறந்ததாக கருதி அவரது உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி
இதற்கிடைேய பால்துரை தாக்கப்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, திக்கணங்கோடு பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பால்துரையை வக்கீல் ஜோசப் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பால்துரையின் மனைவி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வக்கீல் ஜோசப் மற்றும் ரமேசை கைது செய்தனர்.
பிணம் தோண்டி எடுப்பு
இதற்கிடைேய காண்டிராக்டர் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று தக்கலை உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், கல்குளம் தாசில்தார் ஜெகதா, தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் முன்னிலையில் கல்லறை தோட்டத்தில் இருந்து பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பு காண்டிராக்டர் சாவில் மேலும் பல தகவல்கள் தெரிய வரலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.