திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருப்பூர்:-
திருப்பூர் மாவட்டத்தில் குடியிருந்து வரும் திருநங்கைகளுக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நேற்று அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகம் மற்றும் தனிதாசில்தார் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கும் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ஆதார் அட்டை, புகைப்படம், கியாஸ் இணைப்பு புத்தகம் ஆகியவற்றுடன் திருநங்கைகள் கலந்து கொண்டு புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதி, அவினாசி, உடுமலை ஆகிய தாசில்தார் அலுவலகத்தில் தலா ஒரு திருநங்கை என 3 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர பெயர் மாற்றம், முகவரி மாற்றம் குறித்து ஆலோசனைகளை திருநங்கைகள் கேட்டு சென்றனர்.
மேலும் ரேஷன் கார்டில் பொதுமக்கள் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் மொத்தம் 157 பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 160 விண்ணப்பங்களில், 151 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 9 விண்ணப்பங்கள் போதுமான ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று மாவட்ட வழங்கல் அதிகாரி கணேஷ் தெரிவித்தார்.