சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
நாகையில், சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகூர் ஷாஜியார் தெருவைச் சேர்ந்தவர் செய்யதுமீரான் (வயது 58). இவர் நாகூர் அ.தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று செய்யது மீரான் புகைப்படத்துடன் நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் இதேபோல போஸ்டர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்யது மீரான் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனக்கும், அ.தி.மு.க.வுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.