பொங்கலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

பொங்கலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது 32 பவுன் நகை பறிமுதல்

Update: 2021-02-13 16:59 GMT
பொங்கலூர்:-
பொங்கலூர் அருகே பல்வேறு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 32 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
கத்திமுனையில் நகை பறிப்பு
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் பாலாமணி (வயது 60). இவர் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி மாலை வீட்டில் இருந்தபோது ஒரு மர்ம ஆசாமி வந்துள்ளார். அவர் குடிக்க தண்ணீர் கேட்டபோது பாலாமணி குடிநீர் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.
உடனடியாக அவரது பின்னால் வீட்டிற்குள் சென்ற மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி பாலாமணி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாலாமணியின் மகன் தங்கமணி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 
வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் கேத்தனூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கு கொண்டு தப்பிக்க முயன்றார்.‌
உடனடியாக அவரை துரத்திப்பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனபால்  மகன் லோகநாதன் (28) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த மாதம் மந்திரிபாளையம் பாலாமணி வீட்டில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 
கைது
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் அவினாசிபாளையம், மூலனூர், ஊத்துக்குளி, குன்னத்தூர் மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட கருமத்தம்பட்டி, காரமடை, சூலூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழிப்பறி, கொள்ளை,திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லோகநாதனை அவர் தங்கியிருந்த திருப்பூர் கருவம்பாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் வீட்டில் இருந்து சுமார் 32 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து லோகநாதனை போலீசார் கைது செய்து நேற்று பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் செய்திகள்