ஐம்பொன் நடராஜர் சிலையை காரில் கடத்திய வாலிபர் கைது

போடியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் நடராஜர் சிலையை காரில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-13 16:45 GMT
போடி:
போடியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் நடராஜர் சிலையை காரில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். 
 நிற்காமல் சென்ற கார்
தேனி மாவட்டம் போடி போஜன் பூங்கா பகுதியில் நேற்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்த போலீசார், அந்த காரை மறித்தனர். 
ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், நிற்காமல் சென்ற காரை போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில், காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
 நடராஜர் சிலை
பின்னர் காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், போடி சண்முகசுந்தரபுரம் தங்க முத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மகன் மணிகண்டன் (வயது 26) என்று தெரியவந்தது. 
மேலும் காரிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் சந்தேகப்படும் வகையில் சாக்குப்பை ஒன்று இருந்தது. உடனே அதை போலீசார் திறந்து பார்த்தனர். அதில், நடராஜர் சிலை ஒன்று இருந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் போடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் இருந்து கார், நடராஜர் சிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
பறிமுதல் செய்த நடராஜர் சிலை 3 அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்டது. இது 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது. 
  வாலிபர் கைது
இதனையடுத்து மணிகண்டனிடம், சிலையை காரில் கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தகோவிலை சேர்ந்த 3 பேர், இந்த நடராஜர் சிலையை பத்திரமாக போடியில் வைத்திருக்குமாறும், பின்னர் நாங்கள் வந்து வாங்கி கொள்கிறோம் என்றும் கூறியதாக மணிகண்டன் தெரிவித்தார்.
 மேலும் சிலையை பதுக்கி வைப்பதற்காக பணம் தருவதாக கூறியதால், அந்த சிலையை ஆண்டிப்பட்டியில் இருந்து தனது வீட்டுக்கு கடத்தி சென்றதாகவும் அவர் கூறினார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை கடத்தியதாக மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
மேலும் நடராஜர் சிலையை கேரளா வழியாக வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்