மூங்கில்துறைப்பட்டு அருகே சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
மூங்கில்துறைப்பட்டு அருகே சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் கூட்டு ரோடு பகுதியில் இருந்து சேராப்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் அதிக வளைவுகள் உள்ளதால் விபத்துகளை தவிர்க்க சாலை ஓரத்தில் தடுப்பு கம்பிகள் மற்றும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சேராப்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஒரு வளைவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி மற்றும் சுவர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் சாலை வலுவிழந்து இடிந்து விழும் ஆபாய நிலை உள்ளது.
சேராப்பாட்டு சாலை வழியாக தினமும் 100-க்கணக்கான இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலை கிராமங்களுக்கு சென்று வருகின்றன. அவ்வாறு சென்று வரும்போது சேதம் அடைந்த தடுப்புசுவர் அமைந்துள்ள பகுதியில் வரும்போது எங்கே சாலை இடிந்து விபத்து நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது. எனவே உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் சாலையில் சேதம் அடைந்த தடுப்பு சுவர் மற்றும் கம்பியை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.