மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்பு
மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான மேலும் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சென்னை,
சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக வந்த ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சிவபாஜி, கோபி சாந்த், ஆகாஷ் மற்றும் இவர்களது நண்பர்கள் ராஜசேகர், சிவபிரசாத் ஆகிய 5 பேரும் மெரினா கடற்கரைக்கு நேற்று முன்தினம் வந்தனர். அப்போது மாணவர்கள் 5 பேரும் கடலில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையின் காரணமாக சிவபாஜி, கோபி சாந்த், ஆகாஷ் ஆகிய 3 பேரும் அலையில் சிக்கி மாயமானார்கள்.
இதையடுத்து அங்கு வந்த மெரினா தீயணைப்பு படையினர், படகு மூலம் கடலில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பிறகு சிவபாஜியை பிணமாக மீட்டனர். மேலும், கோபி சாந்த், ஆகாஷின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ராட்சத அலையில் சிக்கி மாயமான கோபி சாந்த், ஆகாஷின் உடல்கள், மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பரப்பில் நேற்று கரை ஒதுங்கியது. இதையடுத்து உடல்களை மீட்ட அண்ணா சதுக்கம் போலீசார், உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.