விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று உடுமலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

Update: 2021-02-12 23:02 GMT
திருப்பூர்:
விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று உடுமலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
முதல்-அமைச்சர் பிரசாரம் 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். இரவு உடுமலையில் தங்கினார்.
பின்னர் நேற்று காலை உடுமலை பஸ் நிலையம் முன்பு தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தொடர்ந்து பெரியபட்டி, குடிமங்கலம் நால்ரோடு, பல்லடம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் கோட்டை 
உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலம் முதல் இதுவரை உடுமலை தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தான் செல்கிற இடமெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று அவதூறு, பொய் பிரசாரத்தை வாடிக்கையாக பேசி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தின் போது பேசுவது அத்தனையும் பொய். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை என்று தவறான தகவலை பரப்பி வருகிறார். குடிமராமத்து திட்டம் குறித்து பேசும்போது காகித அளவில் உள்ளது என்று கூறியுள்ளார். விவசாயம் பற்றி தெரிவதற்கு அவருக்கு வாய்ப்பு இல்லை. அவர் சென்னையில் வசிப்பவர்.
தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 211 ஏரிகள் பொதுப்பணித்துறை மூலமாக ரூ.1,418 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. 11 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை மூலமாகவும், உள்ளாட்சி துறை மூலமாக 26 ஆயிரம் ஏரி, குளம் உள்ளது. அதில் 28 ஆயிரத்து 623 குளம், குட்டை, ஏரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.422 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கனிமொழி எம்.பி. தவறான செய்தியை பரப்பி வருகிறார். அவை உண்மைக்கு புறம்பானது. இது விவசாயிக்கான அரசு. விவசாயி முதல்-அமைச்சராக இருக்கும் அரசு. வேளாண் சிறந்தால் தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும். உணவு உற்பத்தி அதிகரித்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும். உணவு தானிய உற்பத்தி செய்து தேசிய அளவில் கிரி‌‌ஷ் கர்மான் விருது பெற்றுள்ளோம்.
கால்நடை மருத்துவக்கல்லூரி 
பா.ஜனதா மத்தியில் ஆளுகிறது. தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றுகூறி வருகிறார். நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திருப்பூருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்துள்ளோம். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன கொண்டு வந்தீர்கள். அ.தி.மு.க. அரசு, தமிழக மக்களின் தேவையை எடுத்துக்கூறி மத்திய அரசிடம் பெற்று நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து சாதனை புரிந்தது அ.தி.மு.க. அரசு. 1,100 என்ற சேவை எண் மூலமாக பொதுமக்கள் செல்போன் மூலமாக தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவித்து தீர்வு பெறும் திட்டம் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். ஆனால் இதையும் நாங்கள் சொன்னதால் தான் நிறைவேற்றியுள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறி வருகிறார். இந்த திட்டத்தை 2 மாதங்களுக்கு முன்பே நாங்கள் ஏற்பாடு செய்து விட்டோம்.
உடுமலை பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிரு‌‌ஷ்ணன் கோரிக்கைவைத்தார். ரூ.250 கோடியில் உடுமலையில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறோம்.
மக்கள்தான் பின்புலம் 
மு.க.ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த கனிமொழி, உதயநிதி, தயாநிதிமாறன் ஆகியோர் ஊர், ஊராக பிரசாரம் செய்து வருகிறார்கள். வேறு யாரும் பிரசாரம் செய்யவில்லை. அது ஒரு குடும்பகட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதுக்கு சேர்மன் மு.க.ஸ்டாலின். போர்டு ஆப் டைரக்டர் உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன். மற்றவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தான் தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற பொய் பேசி வருகிறார்கள். உதயநிதி 4 படங்களில் நடித்தவர். மு.க.ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்பது தான் அவருக்கு முத்திரை. வேறு எந்த முத்திரையும் அவருக்கு கிடையாது. தி.மு.க.வில் உழைத்த பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் ஆட்சி, பதவியில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்ட கட்சி தி.மு.க. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி அ.தி.மு.க. ஒரு தொண்டன் முதல்-அமைச்சராகி ஆளுகின்ற மாநிலம் தமிழ்நாடு. மக்களோடு மக்களாக பழகி வருகிறோம். அவர்களின் பிரச்சினையை அறிந்து அரசு திட்டங்களை தீட்டி தீர்வு கண்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் எந்த சிரமத்தையும் அனுபவித்தது கிடையாது. மக்களின் ஆதரவை பெற்று, ஜெயலலிதாவின் செல்வாக்கை பெற்று படிப்படியாக உயர்ந்துள்ளேன். எங்களுக்கு மக்களாகிய நீங்கள் தான் பின்புலம். உழைப்பை நம்பி உயர்ந்துள்ளோம். மு.க.ஸ்டாலின் அவருடைய அப்பாவை நம்பி வந்துள்ளார்.
அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிவதில்லை. அதனால் தான் பத்திரிகையில் அரசு செயல்படுத்திய திட்டங்களை அறிவிக்கிறோம். ஆனால் தினமும் பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை என்று கூறி வருவதால் அதை நாங்கள் தெரிவிக்கிறோம். அவர்களின் பொய் பிரசாரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவே அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தெரிவித்து வருகிறோம். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு. மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் வருகிறேன். நீங்களும் வாருங்கள். இருவரும் ஒரே நேரத்தில் வாதிக்க வர தயாரா?. தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. நாங்கள் உண்மையை பேசுகிறோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதற்கு ஏன் பொறாமைப்படுகிறீர்கள்.
 மும்முனை மின்சாரம் 
 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். ரூ.12 ஆயிரத்து 110 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(நேற்றுமுன்தினம்) திருப்பூர் மாவட்ட விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள். அமைச்சர் மற்றும் துணை சபாநாயகரும் கருத்துகளை தெரிவித்தார்கள். இந்த கருத்துகளை ஒன்றாக இணைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்துள்ளனர். மும்முனை மின்சாரம் இனி 24 மணி நேரமும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம் 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசு மத்தியில் ஆளும் ஆட்சிக்கு அடிமை ஆட்சியாக உள்ளது என்று கூறுகிறார். 13 ஆண்டு காலம் மத்தியில் அங்கம் வகித்தது நீங்கள் தான். நீங்கள் தான் அடிமையாக செயல்பட்டீர்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம், பதவி வேண்டும் என்பதற்காக அடிமையாக இருந்தீர்கள். மத்திய அரசிடம் நாங்கள் எதை தட்டிக்கேட்க வேண்டுமோ அதை தட்டிக்கேட்கிறோம். தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை தட்டிக்கேட்கும் கட்சியாக நாங்கள் உள்ளோம். அதுபோல் நல்ல திட்டங்கள் வந்தால் பாராட்டுகிறோம். சாதனை மேல் சாதனைகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. 2 கைகளும் இல்லாத திண்டுக்கல்லை சேர்ந்தவர் கை பொருத்துவதற்கு என்னிடம் மனு கொடுத்தார். சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்து அந்த நபருக்கு பரிசோதனை செய்து, இறந்தவர் உடலில் இருந்த 2 கைகளையும் எடுத்து பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
 உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.50 கோடி பல்வேறு பணிகள் செய்ய வழங்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ஆழியார் அணை பூங்காவில் மணிமண்டபம் கட்டப்பட்டு மார்பளவு சிலை அமைக்க உத்தரவிட்டு பணிகள் நடக்கிறது. ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்ற கேரள முதல்-மந்திரியிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். அது நிறைவேற்றப்படும். காண்டூர் கால்வாய் கரை புதுப்பிக்க ரூ.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
மு.க.ஸ்டாலின்  கனவு பலிக்காது 
பல்லடத்தில் விசைத்தறிகள் நிறைந்தபகுதி. மின்சாரம் முக்கியம். மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சரிவடைந்த தொழில் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. உபரி மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்கிறோம். புதிய தொழில்கள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு எந்த தொழிலும் வரவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 304 தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 10½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கியுள்ளோம்.
விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறோம். வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறோம். ரூ.28 கோடியில் இந்த தொகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.82 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோழிப்பண்ணை அதிகம் உள்ளதால் கோழிக்கு ஏற்படும் நோயை கண்டறிந்து குணப்படுத்த ரூ.13 கோடியில் கோழி நோய் ஆராய்ச்சி நிலையம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் கடல்போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது. மு.க.ஸ்டாலின் ஓடோடி, உருண்டு புரண்டாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடுமலையில் அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரான கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் போடிப்பட்டி ஜெகநாதன், மாவட்ட ஆவின் தலைவர் வக்கீல் மனோகரன், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்க கல்விக்குழும(செனட்) உறுப்பினர் துரையரசன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் சண்முகம், அ.தி.மு.க. மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், உடுமலை கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனர்கள் மளிகை செல்வராஜ், வார்டன் பொன்னுசாமி, நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் பாலசுப்பிரமணியம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் சுரே‌‌ஷ் பொன்முத்துலிங்கம் உள்பட அ.தி.மு.க. மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்