தே.மு.தி.க., தி.மு.க., தலா ஒருமுறை வெற்றி; சேலம் வடக்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
தே.மு.தி.க., தி.மு.க., தலா ஒருமுறை வெற்றி பெற்ற சேலம் வடக்கு தொகுதியில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து காண்போம்.
சேலம்:
தே.மு.தி.க., தி.மு.க., தலா ஒருமுறை வெற்றி பெற்ற சேலம் வடக்கு தொகுதியில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து காண்போம்.
சேலம் வடக்கு தொகுதி
சேலம் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு சேலம் வடக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக போட்டியிட்டு 88 ஆயிரத்து 956 வாக்குகள் பெற்றார். அதேபோல், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிட்டு 59 ஆயிரத்து 591 வாக்குகள் மட்டுமே பெற்று தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
அதன்பிறகு நடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை விட தி.மு.க.வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன் 9 ஆயிரத்து 873 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வடக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தலில் தே.மு.தி.க. மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.
சமநிலையில் ஓட்டு வங்கி
சேலம் வடக்கு தொகுதியை பொறுத்தவரையில் மாநகராட்சியில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியை உள்ளடக்கியதாகும். 13 லட்சத்து 4 ஆயிரத்து 319 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 436 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தர் என மொத்தம் 27 லட்சத்து 4 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வடக்கு தொகுதியில் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு சமநிலையில் ஓட்டு வங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தும் இன்னும் நிறைவடைவில்லை. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ரெயில் செல்லும் போது, முள்ளுவாடி கேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தினமும் காணமுடியும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கிடப்பில் ரெயில்வே மேம்பாலம்
வடக்கு தொகுதி 90 சதவீதம் மாநகராட்சிக்குள் வருவதால் பொதுமக்கள் சுகாதாரம், குடிநீர், சாக்கடை கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தான் உள்ளது. பல வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது.
அணைமேடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அங்கு முதற்கட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தெரு நாய்களின் தொல்லை
எனவே, முள்ளுவாடி கேட் மற்றும் அணைமேடு பகுதியில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. வன்னியர், செட்டியார், சவுராஷ்டிரா, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பரவலாக வசித்து வருகிறார்கள்.
வீடுகள் தோறும் குப்பைகள் அள்ளுதல், சாக்கடை கால்வாய்களை அடிக்கடி தூர்வாருதல், சீரான முறையில் குடிநீர் வினியோகம், தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட முதன்மை நீதிபதி, வனத்துறை அதிகாரி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் வீடுகள் அனைத்தும் வடக்கு தொகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.