கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
சென்னிமலை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
கீழ்பவானி வாய்க்கால்
பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் மொத்த பாசன பரப்பு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் ஆகும். இதில் ஒரு போகம் தண்ணீர் திறக்கப்படும் போது 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மட்டும் தண்ணீர் விடும் அளவுக்கு கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் நேரடி பாசனம் பெறும் போது நீர் திறக்கப்படாத மற்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரில் உள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலம் பாசன நீர் மறைமுகமாக கிடைத்து வந்தது. மேலும் பிரதான வாய்க்காலின் வலது புறம் உள்ள பகுதிகளிலும் 60 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்து இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் வறட்சியும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி நேற்று கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்-அமைச்சருக்கு தபால்
ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். பி.சி.செங்கோட்டையன் (கீழ்பவானி பாசன சபை யு-8), கே.சி.பழனிசாமி (கொங்கு வேளாளர் மகா சபை), துளசிமணி (விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி கலந்து கொண்டு கான்கிரீட் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு கான்கிரீட் திட்டத்தை தமிழக அரசு கைவிட கோரி கைகளில் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அட்டையும் அனுப்பப்பட்டது.
பெண்கள் அதிக அளவு...
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதில் ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணவேணி சிவக்குமார் (பனியம்பள்ளி), சி.தங்கவேல் (எக்கட்டாம்பாளையம்), ஏ.ரமேஷ் (புதுப்பாளையம்), அ.செல்வராசு (புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி) உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓ.சி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதி விவசாயிகள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ெபண்கள் அதிக அளவில் கலந்துகொண்டார்கள்.