சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்
சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
விவசாய கடன்
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் விலையில்லா கோழி குஞ்சுகள், கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில்தான் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். 10 பேருக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித்தரத்தை உறுதி செய்ய திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படும்.
பொதுத்தேர்வு அட்டவணை
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி அளிப்பதில்லை. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத 21 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் இலவசமாக 5,800 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வரும் நீட், ஜெ.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு தனியார் மற்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்துவது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.