கம்பரசம்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கம்பரசம்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜீயபுரம்,
அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சியில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் குறைந்த அளவு வினியோகம் செய்யப்பட்டது.
இதனால் அவதி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், காவிரி ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை சந்தித்து முறையிட சென்றனர். ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்த பகுதிக்கு வழக்கம்போல் காவிரி தண்ணீர் வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் அவதி அடைந்தனர்.