பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 11 இணையவழி பட்டப்படிப்புகள் தொடக்கம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 11 இணையவழி பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.;
மணிகண்டம்,
மத்திய அரசு நாட்டில் உள்ள தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இணையவழி பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைநிைலக்கல்வி பணியகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு 11 இணையவழி பட்டப்படிப்புகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது.
இதைதொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிைலக்கல்வி மற்றும் இணைய வழி கல்வி மையத்தின் வாயிலாக வழங்கப்படும் இணையவழி இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ம.செல்வம் தலைமை தாங்கி 11 இணையவழி பட்டப்படிப்புகளை தொடங்கி வைத்து பேசினார்.
இளநிலை-முதுநிலை
அப்போது இணைய வழி கல்வியில் இளநிலை பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம், மற்றும் வணிக நிர்வாகவியல், ஆகியவையும் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்புகள் வழங்கப்படும் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கோபிநாத் வாழ்த்தி பேசினார்.
முன்னதாக தொலைநிலைக்கல்வி மற்றும் இணைய வழி கல்வி மையத்தின் இயக்குனர் எட்வர்டு வில்லியம் பெஞ்சமின் வரவேற்று பேசினார். முடிவில் துணை பதிவாளர் கலா யோகநாதன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மு.செல்வம், பாபு ராஜேந்திரன், தேர்வாணையர் சீனிவாசராகவன், நிதி ஆலோசகர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.