சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவள் கடந்த 25.9.2016 அன்று வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த குடிசைபையில் கிராமத்தை சேர்ந்த மாரப்பா மகன் சந்திரா (வயது 25) என்பவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரித்து சந்திராவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சந்திராவிற்கு போக்சோ சட்டத்தின் கீழ், 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.