பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேர் கைது
திருப்பத்தூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்தியை காட்டி...
திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்களத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 65) இவருடைய மனைவி செங்காயி(56). கடந்த 9-ந்தேதி இரவு பாண்டி தனது வீட்டு நாயை வெளியே நடைபயிற்சிக்கு அழைத்து சென்று இருந்தார். செங்காயி கணவரின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார்.
பாண்டி வீட்டை விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அவர் சென்றவுடன் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் செங்காயின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தது. சத்தம் போட்டால் குத்தி ெகான்று விடுவதாக மிரட்டியதால் செங்காயி சத்தம் போடவில்லை. நகையை பறித்த அந்த கும்பல் வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்று விட்டது.
போலீசில் புகார்
பின்னர் பாண்டி வந்தவுடன் செங்காயி நகையை மர்ம கும்பல் பறித்து சென்று விட்டதை கண்ணீருடன் கூறி இருக்கிறார். இது குறித்து பாண்டி திருப்பத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மர்ம கும்பல் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரித்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக நாட்டார்மங்கலம் ராமசாமி மகன் குணசேகரன் (வயது 43), திருமங்கலத்தை சேர்ந்த உதயசூரியன் மகன் முத்துக்குமார் (30), வண்டியூர் குரு மகன் மணிகண்டன் (28), அண்ணா நகர் ராசு மகன் ஆனந்த் (35), ஆனையூர் ராமமூர்த்தி மகன் பூபதி (38) ஆகிய 5 பேரை ைகது செய்தனர். கைதானவரிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பொதுமக்கள் பாராட்டினார்கள்.