3 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது
சேரம்பாடி அருகே நீண்ட போராட்டத்துக்கு பிறகு 3 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது. அதை முதுமலையில் உள்ள மரக்கூண்டில் வனத்துறையினர் அடைத்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம் பள்ளியை சேர்ந்த நாகமுத்து (60) மற்றும் தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தராஜா, அவருடைய மகன் பிரசாந்த் ஆகிய 3 பேரை கடந்த டிசம்பர் மாதத்தில் காட்டு யானை கொன்றது.
இதனால் அந்த காட்டு யானையை பிடிக்க கோரி சேரம்பாடி பகுதி பொதுமக்கள் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
மீண்டும் திரும்பியது
இதையடுத்து துப்பாக்கி மூலம் அந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தும்போது கேரள வனப்பகுதிக்கு தப்பிச்சென்றது. தொடர்ந்து கூடலூர், கேரள வனத்துறையினர் இணைந்து அந்த யானையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து மீண்டும் சேரம்பாடி பகுதிக்கு அந்த காட்டு யானை வந்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து விஜய், சுஜய், முதுமலை, சீனிவாசன், பொம்மன் மற்றும் ஆனைமலையில் இருந்து கலீம் என 6 கும்கி யானைகள் சேரம்பாடி கொண்டு வரப்பட்டன.
மயக்க ஊசி செலுத்தப்பட்டது
இதேபோல் கோவை, விருதுநகர், பொள்ளாச்சி, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கூடுதலாக 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கூட்டத்துடன் நின்றிருந்த காட்டு யானையை தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் கூட்டம் வனத்துறையினரை துரத்தியது. இருந்த போதிலும் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 3 பேரை கொன்ற காட்டு யானை தனியாக பிரிக்கப்பட்டது. அந்த யானைக்கு முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், திருப்பூரில் இருந்து டாக்டர் விஜய ராகவன் ஆகியோர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தை செலுத்தினார்கள்.
லாரியில் ஏற்றப்பட்டது
இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்குமிங்கும் ஓடியது. பிறகு சிறிது நேரத்தில் மயங்கியது. உடனே வனத்துறையினர் அந்த யானையின் கால்களில் கயிறுகள் உதவியுடன் மரங்களில் கட்டினார்கள்.
பிறகு காட்டு யானையை வனத்துறை லாரியில் கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் ஏற்றினார்கள். தொடர்ந்து தேங்காய் பழம் கொண்டு காட்டு யானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 3 பேரை கொன்ற காட்டு யானையை பிடித்த தகவல் அறிந்த சேரம்பாடி பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
மரக்கூண்டில் அடைப்பு
இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு காட்டுயானை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மரக்கூண்டில் (கரால்) இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது.
முன்னதாக சம்பவ இடத்துக்கு கூடலூர் வன அதிகாரி கொம்மு ஓம்கார், உதவி வனப்பாதுகாவலர் விஜயன் மற்றும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
20 வயது
இது குறித்து கூடலூர் வன அதிகாரி கொம்மு ஓம்கார் கூறும்போது, 3 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்கும் பணி மிகப்பெரிய சவாலானதாக இருந்தது. பிடிபட்ட ஆண் காட்டு யானைக்கு 20 வயது இருக்கும் என்றார்.
3 பேரை கொன்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து உள்ளதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.