அரசு கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி

குறைகளை கண்டு்பிடிக்க பூதக்கண்ணாடி வேண்டாம் கண்களை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். ஏனெனில் அரசு கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தான் என்று விழுப்புரத்தில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2021-02-12 17:47 GMT
விழுப்புரம், 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது 3-ம் கட்ட பிரசார பயணத்தை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணைகுப்பம் ஊராட்சியில் இருந்து தொடங்கினார்.  இதில் விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக விளையாட்டு, கல்வி மற்றும் சமூக சேவை போன்றவற்றில் பல்வேறு பணிகளை செய்து சாதனை படைத்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மாவட்ட பிரச்சினை குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
பின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் யார்? 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பயணத்தை இதுவரை 2 கட்டங்களாக நடத்தி 71 தொகுதி மக்களை சந்தித்துள்ளேன். இன்று 3-ம் கட்ட பயணத்தை தொடங்கி உள்ளேன். 
நான் வலம் வந்த தொகுதிகளில் மக்கள் பேசுவதை கேட்கும் போது தமிழகத்தில் ஆட்சி என்பது இல்லவே, இல்லை என்பதை தான் உணர முடிகிறது.
ஆட்சி என்பது இருந்திருந்தால் மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டு இருக்கும். மக்கள் கோரிக்கை வைப்பது எல்லாம் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கான கோரிக்கை அல்ல. அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகள் தான். அதை கூட தீர்த்து வைக்கவில்லை எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுப்பதை பார்த்து மிரண்டு போன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறைதீர்க்கும் வேளாண் திட்டம் கொண்டு வரப்போவதாவும், அதற்கு போன் செய்தால் போதும், ஸ்டாலினுக்கு வேலை இல்லை என்று சொல்லி வருகிறார். 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அவருக்கு இந்த புத்திவரவில்லையே ஏன்?.
ஸ்டாலின் சொன்ன பிறகு தான், அதுவும் ஆட்சி முடியும் நேரத்தில் தான் வருகிறதா?. நான் கேட்கிறேன், யார் முதல்-அமைச்சர் ஸ்டாலினா? எடப்பாடியா? இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் அனைவருக்கும் செல்போன் தருவோம் என்றார்கள். கொடுத்தார்களா,? 
கடந்த 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை தான் தமிழக மக்கள் மனுக்கள் மூலமாக என்னிடம் சொல்லி வருகிறார்கள்.

அரசு கட்டிடங்கள் இடிந்து விழும் சத்தம் 

பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பூதக் கண்ணாடி தேவையில்லை, கண்களை மூடிகொண்டு இருந்தாலே அவர்கள் ஆட்சியில் உள்ள குறைகள் தெரிந்துவிடும். கண்களை மூடிக்கொண்டிருந்தால், திடீரென விழுப்புரத்தில் தடுப்பணை உடையும் சத்தம் வரும், படார் என்று தாராபுரம் பாலத்தில் விரிசல் விழும் சத்தம், கரூரில் மினி கிளினிக் சுவர் இடிந்து விழும் சத்தம், நாமக்கலில் மருத்துவக்கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து சத்தம் கேட்கும்.
இவ்வாறு, படார், படார் என்றும், மடார், மடார் என்றும் அரசு கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சியாகும். இது பொதுப்பணித்துறை மந்திரியான எடப்பாடி பழனிசாமியின் கைங்கரியம் என்று அர்த்தம்.

தடுப்பணை உடைந்தது 

ஊழல் ஆட்சிக்கு உதாரணமாக, விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாதத்தில் உடைந்து விழுந்துவிட்டது. இது அணை அல்ல, சுவர் தான் என்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
25 கோடி ரூபாய் தடுப்பணையில், எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்று தெரியவில்லை.
திருடனுக்கு தேள் கொட்டியது போன்று மாட்டி கொண்டார் சி.வி. சண்முகம். அதனால், அணை உடைந்ததும், இன்னும் நாங்கள் அணையை திறக்கவில்லை என்று சி.வி.சண்முகம் கூறினார். ஆனால், 20-12-2020 அன்று அமைச்சர் சி.வி.சண்முகம் விழாவில் கலந்து கொண்டு, அணையை திறந்து வைத்தார் (அப்போது இது தொடர்பான குறும்படம் ஒன்றையும் வெளியிட்டு ஆதாரத்துடன் பேசினார் மு.க.ஸ்டாலின்).
நல்ல வேளை நாங்கள் இன்னும் அணையை கட்டவில்லை என்று அவர் சொல்லவில்லை. ஒரு படத்தில் நடிகர் வடிவேலு சொல்வார், கிணற்றை காணவில்லை என்று, அதுபோன்று பேசி வருகிறார் சி.வி.சண்முகம்.

முதல்-அமைச்சர் பதில் சொல்வாரா? 

ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்ததாரர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?. சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதுவும் கண்துடைப்பு தான். ஒரு ஆண்டுக்கு முன்பு செஞ்சியில் ஒரு ஆண்கள் பள்ளியில் உள்ள செப்டிக் டேங்க் இடிந்தது, அதற்காக ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். ஆனால், தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் ஏன் கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் என்ன?. பொதுப்பணித்துறையை வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா? அல்லது சி.வி.சண்முகம் பதில் சொல்வாரா?.

சி.வி.சண்முகம் மீது சாடல் 

சி.வி.சண்முகம் அவர்களே, நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்கு உரியது, அதை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் பேசுங்கள். என்னை சி.வி.சண்முகம் ஒருமையில் பேசுகிறார். அதனால் எனது தகுதி குறையப் போவதில்லை. சி.வி.சண்முகம் அவர்களே, உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்கு தானே தவிர, வாந்தி எடுக்க அல்ல. தி.மு.க.வை நோக்கி மானம் இல்லையா என்கிறார் சண்முகம். உங்களை கொலை செய்ய ஆள் அனுப்பியவர், வீட்டிலேயே இலைபோட்டு சாப்பிட்டீர்களே உங்களுக்கு மானம் இல்லையா?
ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை களையை முயற்சி எடுத்தீர்களா?. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் குற்றம்சாட்டி பேட்டி கொடுத்தாரே?, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொன்னவரும் சண்முகம் தானே. இன்று இருவரும் ஒரே அமைச்சரவையில் எப்படி இருக்கிறீர்கள்.

பதவியை பறித்தார் ஜெயலலிதா 

2012-ம் ஆண்டு சி.வி.சண்முகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார். எதற்காக, பறித்தார் என்பதை அவர் சொல்வாரா?. பத்திரப்பதிவு துறையில் புகுந்து விளையாடியதுடன், அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளார். இதனால் அவரது பதவியை பறித்து உட்கார வைத்தார் ஜெயலலிதா.
முந்தைய ஆட்சி காலத்தில் அவரால் அமைச்சர் ஆக முடியவில்லை. இந்த முறைகூட கருணை அடிப்படையில் மாவட்ட கோட்டாவில் அமைச்சர் ஆனவர் தான் சி.வி.சண்முகம். தனது பதவியை பயன்படுத்தி இந்த மாவட்ட மக்களுக்கு இவர் செய்தது என்ன என்று, நான் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிந்ததா?.

மக்கள் விரோத ஆட்சி 

பொதுமக்களின் குறைகளை கேட்கவோ, தீர்க்கவோ, மக்களை பற்றி நினைக்கவோ, மக்களோடு இருக்கவோ மாட்டார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க உங்களை கேட்கிறேன். கழக ஆட்சி மலரும், உங்கள் கவலைகள் யாவும் தீரும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்