பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்
சிங்கம்புணரியில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்ததை தொடர்ந்து இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அதன்பிறகு அரசு தேர்வுகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது 9-ம் வகுப்பு, பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர். அதோடு பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள்
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சிங்கம்புணரியில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறைந்த பஸ்களே செல்வதால் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். இதை பார்க்கும் பொதுமக்கள் மனம் பதைபதைக்கின்றனர்.
கூடுதல் பஸ்கள்
இது குறித்து சமூக ஆர்வலர் பாலா கூறும் போது, கொரோனா தொற்றுக்கு குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. பள்ளிகளும் திறக்கப்பட்டு இருப்பதாலும் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் மாணவர்களும், பொதுமக்களும் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளி நேரங்களில் சிங்கம்புணரியில் இருந்து சுற்றுவட்டார பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.