லாரி மீது வேன் மோதி வியாபாரி பலி
பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதி வியாபாரி பலியானார்
வாடிப்பட்டி,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சிவராம்(வயது 30). இவர் குடும்பத்தோடு ஈரோட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு வேனில் சென்றனர். பின்னர் ஈரோட்டிலிருந்து மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை, ராஜபாளையத்தை விஜய ஆனந்தகிருஷ்ணன்(39) ஓட்டினார். அந்த வேன் வாடிப்பட்டி அருகே நள்ளிரவு 12.45 மணிக்கு குலசேகரன்கோட்டை குவாகரடு பிரிவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையில் பழுதாகி ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக வேன், லாரியின் பின்புறம் மோதியது. இதில் வேனில் இருந்த பாத்திரக்கடை வியாபாரி முனியப்பன், டிரைவர் விஜய ஆனந்த கிருஷ்ணன், சிவராம், சாந்தி, மல்லிகா, ராஜகுரு உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமசந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.