ரத்தினகிரி அருகே சீட்டு மோசடி வழக்கில் வாலிபர் கைது
ரத்தினகிரி அருகே சீட்டு மோசடி வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு
வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோபி. இவர்கள் ரூ.1 லட்சம் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என ரூ.2 கோடிக்கும் மேல் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி மற்றும் அரப்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ளவர்கள் சீட்டுப் பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சீட்டு எடுத்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவருடன் 20-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று சீட்டு பணம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சீட்டு பணம் கேட்க வந்தவர்களை ராஜேந்திரன் மகன் கோபி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபியின் தந்தை ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.