விருத்தாசலம் வெண்மலையப்பர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
விருத்தாசலம் வெண்மலையப்பர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஆலடி சாலையில் பெரியகண்டியங்குப்பத்தில் வெண்மலையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஏராளமான மீன்கள் இருந்தன. இந்நிலையில் குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குளத்தின் அருகில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் முந்திரி பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதற்கு தேவையான தண்ணீரை இந்த குளத்தில் இருந்து தான் அவர்கள் எடுத்து செல்கின்றனர்.
அவ்வாறு எடுத்து செல்லும் போது, சிலர் மருந்தை குளத்து தண்ணீரில் கலந்ததாக தெரிகிறது. இதனால் தான் குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.
மீன்கள் செத்து மிதப்பதால் குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தில் கால்நடைகளும் தண்ணீர் குடிக்க வரும். இதனால் அவைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
எனவே இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.