தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் சாலை மறியல்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-12 15:49 GMT
தேனி:
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்கம் சார்பில், பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பங்களாமேட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தேனி மாவட்ட தலைவர் பொன்அமைதி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மதுரை சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தீர்வு ஏற்படுத்தாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 137 ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்