கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-02-12 15:45 GMT
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகன் பாண்டியன் (வயது 20). இவர் மதுரையில் விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பாண்டியன் கடந்த 10-ந்தேதி மதுரையில் இருந்து கூடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது லோயர்கேம்ப் வரை சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் தனது மகனை முருகன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 
இதற்கிடையே லோயர்கேம்ப் அருகே முல்லைப்பெரியாற்றில் உள்ள வைரவன் வாய்க்கால் கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று நிற்பதாகவும், ஒரு ஜோடி செருப்பும் கிடப்பதாகவும் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளும், செருப்பும் பாண்டியனுக்கு சொந்தமானது தெரியவந்தது. 
இதையடுத்து அவரது தந்தை முருகனை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து பாண்டியன் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் ஆற்றில் பாண்டியனை தேடினர். இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று காலை பாண்டியனின் உடல் முல்லைப்பெரியாற்றில் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லோயர்கேம்ப் போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்