உடன்குடியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் சூறை அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு
உடன்குடியில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை சூறையாடியதாக அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
உடன்குடி:
உடன்குடி வடக்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது ரியல் எஸ்டேட் அலுவலகம் உடன்குடி கீழபஜாரில் உள்ளது. இவரும், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் (52) கூட்டாக சேர்ந்து தொழில் செய்து வந்தனர். கோபாலகிருஷ்ணன் உடன்குடி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தொழிலில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன், அவருடைய மகன் ராம்குமார், கோபாலகிருஷ்ணின் தம்பி ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராமஜெயத்தின் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குள் புகுந்துள்ளனர். அங்கு இருந்த பெண் ஊழியரை வெளியே அனுப்பி விட்டு, அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தி சூறையாடிவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் மீது குலசேகரபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் காயத்துடன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.