குரிசிலாப்பட்டு அருகே பூசாரி அடித்துக்கொலை
குரிசிலாப்பட்டு அருகே பூசாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கள்ளகாதல் காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருப்பத்தூர்
பூசாரி கொலை
திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு அருகே வடுகம்முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சீனிவாசன் (வயது 35). எலக்ட்ரீசியன். டேங்க் ஆபரேட்டராகவும் பணி புரிந்து வந்தார். மேலும் அதேப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்வதுடன், அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் குடிசை போட்டு குறி சொல்லி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு அங்கு வந்த பொதுமக்களுக்கு குறி சொல்லிவிட்டு, அங்கேயே தங்கியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
கள்ளக்காதல் காரணமா?
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் சீனிவாசன் கொலை செய்யப்படிருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலைசெய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை விசாரணை
மேலும் சீனிவாசன் கொலைகுறித்து தனிப்படை அமைத்தும் வி்சாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு லட்சுமி என்ற மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது லட்சுமி நிம்மியம்பட்டு கிராமத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்