கார்டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் மனைவி புகார்.
கார்டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
வேலூர்
கார் டிரைவர்
காட்பாடி தாலுகா மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 27), கார் டிரைவர். இவருடைய மனைவி ரூபிகா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யஸ்வந்த் என்ற மகன் உள்ளான். ரூபிகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தினேஷ் பாகாயம் தொரப்பாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பாகாயம் போலீசார், பிணத்தைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பாகாயம் போலீசில், தினேஷ் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தினேசின் உறவினர்கள் கூறியதாவது:-
பணம் கொடுத்தால் தான் விடுவார்கள்
தினேஷ் சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின் காட்பாடியில் வசித்து வந்தார். அவருக்கும், அவர் வேலை பார்த்த கால் டாக்சி நிறுவன உரிமையாளருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.
தினேஷ் இறப்பதற்கு முந்தைய நாள் சிலர் வீட்டுக்கு வந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தினேசையும், அவரின் மனைவியையும் அழைத்துச் சென்றனர். அன்று இரவு ரூபிகாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இரவு தினேஷ், ரூபிகாவை தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் தான் என்னை விடுவார்கள், எனத் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை பணம் ஏற்பாடு செய்து தருவதாக ரூபிகா கூறினார். ஆனால், மறுநாள் காலை தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக ரூபிகாவுக்கு தகவல் வந்துள்ளது. தினேசின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மயக்கமடைந்து விழுந்த மனைவி
புகார் மனு கொடுக்க வந்தபோது, கர்ப்பிணியான ரூபிகா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.