மாமுல் தர மறுத்ததால் ஆத்திரம் ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
மாமுல் தர மறுத்ததால் ஆத்திரம் ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;
தாம்பரம்,
சென்னை குரோம்பேட்டை, சி.எல்.சி. லேன், 6-வது தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். குரோம்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் யுவராஜ் என்பவர் மாமுல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை குமார் எதிர்த்து யுவராஜுக்கு யாரும் மாமுல் தர வேண்டாம் என வியாபாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த யுவராஜின் மகன் சதீஷ் என்ற சுண்டு என்பவர் நேற்று முன்தினம் இரவு 2 நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் குமாரின் ஓட்டலுக்கு வந்து அங்கிருந்த குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் கைகள், தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.