கண்டக்டர் மீது சானிடைசர்-முட்டை வீச்சு: பஸ்களை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
பெருங்குடி அருகே கண்டக்டர் மீது பள்ளி மாணவர்கள் சானிடைசர்-முட்டை வீசியதால் பஸ்களை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை தி.நகரில் இருந்து நேற்று மாலை செம்மஞ்சேரிக்கு மாநகர பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் குமரவேல் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக செல்வகுமார் (50) என்பவர் இருந்தார். பெருங்குடி அருகே பஸ்சில் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஏறினர். பஸ்சில் ஏறியதில் இருந்தே சானிடைசரை ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருந்தனர்.
இதில் சானிடைசர் கண்டக்டர் மற்றும் பயணிகள் மீது பட்டது. இதை கண்டக்டர் செல்வகுமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் சானிடைசர் மற்றும் முட்டையை கண்டக்டர் மீது வீசிவிட்டு துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சிக்னலில் இறங்கி ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் சாலையிலேயே பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவ்வழியே வந்த பத்துக்கும் மேற்பட்ட மாநகர பஸ்குளை டிரைவர்கள் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே துரைபாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அங்கிருந்து டிரைவர்கள் பஸ்சை எடுத்து சென்றனர். இந்த போராட்டத்தால் ராஜீவ்காந்தி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.