கல்பாக்கம் அருகே, ரூ.16¾ கோடியில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம்
கல்பாக்கம் அருகே ரூ.16 கோடியே 80 லட்சத்தில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளத்துக்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவர் பகுதிகளில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மீனவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் பகுதிகளில் தூண்டில் வளைவு மற்றும் நேர்கல் தடுப்பு சுவருடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை புதுப்பட்டிணம் கடற்கரையில் மீன்வளத் துறை ஆணையர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் எஸ்வந்தராவ், மீன் வளத்துறை உதவி பொறியாளர் சேனாதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வி.எஸ்.ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீன்வளர்ச்சி துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.16 கோடியே 80 லட்சத்தில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளத்துக்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.