நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமனை கோவை புறநகர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமனை கோவை புறநகர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-02-12 01:12 GMT
கல்யாண ராமன்
கோவை
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமனை கோவை புறநகர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

கல்யாணராமன் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 31-ந் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் கலந்து கொண்டு நபிகள்நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தின. இதைத் தொடர்ந்து கல்யாணராமன் (வயது 51), மேட்டுப்பாளையம் பா.ஜனதா ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் (49) ஆகிய 2 பேரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது இரு மதத்தினர் மீது பிளவு ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைத்தல், தேச ஒற்றுமை பாதிப்படையும் வகையில் பேசுதல், கலவரத்தை தூண்டுதல், மிரட்டும் வகையில் பேசுதல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன்மனு தள்ளுபடி

இதைத் தொடர்ந்து கல்யாணராமன் ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதவிரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி கோவை ரத்தினபுரி போலீசார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் கல்யாணராமனை ரத்தினபுரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இந்த நிலையில் கல்யாண ராமன் தொடர்ந்து மதவிரோதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மேட்டுப்பாளையம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். 

அதன்பேரில் கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

 இதற்கான உத்தரவின் நகலை கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்