சேலம், மேட்டூரில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சேலம், மேட்டூரில், தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-02-11 23:37 GMT
சேலம்:
சேலம், மேட்டூரில், தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆடி அமாவாசையின் போது கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நேற்று தை அமாவாசையையொட்டி சேலத்தில் சில இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
வழிபட்டனர்
 சேலம் சுகவனேசுவரர் கோவில் அருகே உள்ள வாசவி சுபிட்ஷா ஹாலில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வாழை இலையில் பூ, தேங்காய், பழம் மற்றும் சில காய்கறிகள், பழங்களை வைத்தனர். பின்னர் அர்ச்சர்கள் மந்திரம் முழங்கினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து எள், சாதம் கலந்த உணவை சம்பந்தப்பட்டவர்கள் காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். மஞ்சள், அரிசி கலந்ததை தர்ப்பணம் செய்ய வந்தவர்களின் குடும்பத்தினரின் நெற்றியில் அர்ச்சகர்கள் இட்டனர். இதேபோல் சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திலும் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு நடத்தினர்.
மேட்டூர்
மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் நேற்று ஏராளமானவர்கள் தர்ப்பணம் ெகாடுத்தனர். காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலைய புதுப்பாலம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள்  கலந்து கொண்டு தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்