சேலத்தில் லாரி மோதி பெண் பலி

சேலத்தில் லாரி மோதி பெண் பலியானார். அவரது கணவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2021-02-11 23:27 GMT
சேலம்:
சேலத்தில் லாரி மோதி பெண் பலியானார். அவரது கணவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
எண்ணெய் வியாபாரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 49). இவருடைய மனைவி அமுதா (45). செல்லமுத்து தனது மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். 
நேற்று காலை அவர்கள் இருவரும் எண்ணெய் வியாபாரம் செய்வதற்காக ராசிபுரத்தில் இருந்து சேலம் வந்தனர். பொன்னம்மாபேட்டை பகுதியில் வியாபாரம் செய்துவிட்டு டி.எம்.எஸ்.மணல்மேடு அருகே சென்றனர். அப்போது, பின்னால் வந்த கான்கிரீட் கலவை கலக்கும் லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, அமுதா சாலையின் நடுவிலும், செல்லமுத்து சாலையின் ஓரமாகவும் விழுந்தனர்.
பெண் சாவு
அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரம் அமுதா மீது ஏறியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த அவர் தனது கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இறந்துபோன அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், படுகாயம் அடைந்த செல்லமுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்