சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க பாதுகாப்பு அறை கட்டும் பணி மும்முரம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் பயன்பாட்டுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க பாதுகாப்பு அறை கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Update: 2021-02-11 23:16 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் பயன்பாட்டுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க பாதுகாப்பு அறை கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் சட்டசபை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் வி.வி.பேட் எந்திரங்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பு அறை
இந்த மின்னணு எந்திரங்கள் தற்போது சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட மாவட்டந்தோறும் அதற்கென்று தனி கட்டிடம் கட்டப்படுகிறது. அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.6 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
தரைத்தளம் மற்றும் 3 மாடிகளை கொண்ட இந்த கட்டிட பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்த பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த கட்டிடத்துக்கு மாற்றி வைக்கப்படும். அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் அலுவலகம் வழக்கம் போல் கலெக்டர் அலுவலகத்திலேயே செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்