ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி
ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
ஓமலூர்:
ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவ பரிசோதனை
ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 வயதில் ஸ்ரீ கிருஷ்ணன் என்ற குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் ஆறுமுகம் வேலைக்கு சென்றுவிட்டார். கலைவாணி சரக்கபிள்ளையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள கூறி விட்டு சென்று உள்ளார்.
மின்சாரம் தாக்கி குழந்தை பலி
மேலும் வீட்டின் முன்பு கட்ட பயன்படுத்தும் மின் விளக்கிற்கான ஹோல்டர் வயருடன் கழற்றி வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனை குழந்தை ஸ்ரீகிருஷ்ணன் தொட்டு விளையாடியபோது எதிர்பாராதவிதமாக. மின்சாரம் தாக்கியது. இதில் குழந்தை தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தது. இதையடுத்து உறவினர்கள் ஸ்ரீகிருஷ்ணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.