ஈரோடு சேட் காலனியில் பழமையான நுழைவுவாயில் இடிப்பு; மீண்டும் கட்ட கோரிக்கை
ஈரோடு சேட் காலனியில் பழமையான நுழைவுவாயில் இடிக்கப்பட்டதால் அதை மீண்டும் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாநகரின் முக்கிய பகுதியாக இருப்பது சேட் காலனி. ஈரோடு நகர்மன்றத்தின் தலைவராக 1956 முதல் 1960 வரை பொறுப்பில் ‘கேசவலால் சேட்’ என்பவர் இருந்தார். இவர் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். திரைப்படங்களும் தயாரித்து உள்ளார். அவரது காலத்தில் திருமண மண்டபத்துக்காக பாபுசேட் திருமண மண்டபம் அமைந்து உள்ள பகுதி, சின்னமார்க்கெட் பகுதிகளை வழங்கினார். அவரது நினைவாக அதே பகுதியையொட்டி சேட் காலனி உருவாக்கப்பட்டு, அவரது சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
நீண்டகாலமாக ஈரோட்டின் அடையாளமாக சேட் காலனி நுழைவுவாயில் இருந்து வந்தது. சமீபகாலமாக அந்த நுழைவுவாயில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. அதனை சீரமைக்க வேண்டும் என்று கோட்டை பொதுமக்கள் நல சங்கம் சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை சேட் காலனி நுழைவு வாயில் நேற்று இடித்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சேட் காலனி நுழைவு வாயிலை உடனடியாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் எழுந்து உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் கவுன்சிலர்கள் கருப்புசாமி, விஜயபாஸ்கர், கேசவலால் சேட்டின் பேரன் அசோக் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, ஈரோடு பகுதியில் சொந்த இடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தானம் கொடுத்தவர் கேசவலால் சேட். அவரது நினைவாக வைக்கப்பட்டு இருந்த சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இப்போது நுழைவு வாயிலும் அகற்றப்பட்டு இருக்கிறது. இது மீண்டும் முறையாக அமைக்கப்படவில்லை என்றால் ஒரு சிறந்த மனிதரின் தியாகத்தை மறந்தவர்களாகி விடுவோம். எனவே மீண்டும் நுழைவு வாயில் மற்றும் சிலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அமைக்க வேண்டும். இல்லை என்றால் கோட்டை பகுதி மக்கள் அமைக்க தாயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.