தோட்டத்துக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு
வடமதுரையில் தோட்டத்துக்குள் 7 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஏ.வி.பட்டி சாலையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 55). விவசாயியான இவர், தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கோழிகளை வளர்த்து வருகிறார்.
நேற்று அந்த கொட்டகைக்குள் 7 அடி நீள சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் நிலைய அலுவலர் போஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், முத்துலட்சுமியின் தோட்டத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை, வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து வடமதுரையில் உள்ள வேடசந்தூர் பிரிவில், அய்யலூர் வனக்காவலர் கிரேசி உஷாதேவியிடம் பாம்பை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தபோது அது திடீரென சாக்குப்பையில் இருந்து தப்பி ஓடியது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு அங்குள்ள புதருக்குள் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை மீண்டும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை அய்யலூர் வனப்பகுதியில் விட்டனர்.