காட்டெருமை தாக்கி மூதாட்டி பலி

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி மூதாட்டி பலியானார்.

Update: 2021-02-11 22:23 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரியபிக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 65). திருமணம் ஆகவில்லை. இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் பழைய அருவங்காடுக்கு செல்லும் வழியில் எடிசித்தை என்ற இடத்தில் உள்ளது. அங்கு அவர் தினமும் பச்சை தேயிலை பறிக்க சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில்  தனது தேயிலை தோட்டத்துக்கு லட்சுமி சென்றார். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் சில தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்த தேயிலை தோட்டத்துக்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது.

சம்பவ இடத்திலேயே பலி

இதை கண்ட லட்சுமி மற்றும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பின்னர் காட்டெருமையிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர். எனினும் துரத்தி வந்த காட்டெருமை லட்சுமியை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன்பிறகு அங்கிருந்து காட்டெருமை சென்றது. இதுகுறித்து குன்னூர் வனத்துறைக்கு தொழிலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்னர். தேயிலை தோட்டத்தில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்